புதரில் ஆண் எலும்புக்கூடு மீட்பு

ராஜாக்கமங்கலம் அருகே புதரில் ஆண் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. அவரை அடித்து கொன்று மர்ம நபர்கள் புதரில் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-06 20:57 GMT
ராஜாக்கமங்கலம், 
ராஜாக்கமங்கலம் அருகே புதரில் ஆண் எலும்புக்கூடு மீட்கப்பட்டது. அவரை அடித்து கொன்று மர்ம நபர்கள் புதரில் வீசினார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
மனித எலும்புக்கூடு
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பாம்பன்விளை பகுதியில் ஒரு தனியார் பள்ளியின் பின்புறம் முட்புதர்கள் நிறைந்து உள்ளது. அடர்ந்த காட்டு பகுதி போன்று காணப்படும் அந்த பகுதியின்  அருகே ஒரு கிறிஸ்தவ மடாலயம் உள்ளது. அங்கு தங்கியிருந்த விஜய் ஆண்டனி, எட்வின் ராஜா ஆகிய 2 பேரும் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று மாலையில் சென்ற போது ஒரு ஆடு முட்புதர் நிறைந்த பகுதிக்குள் சென்று விட்டது. அதனை பின்தொடர்ந்து சென்ற 2 பேருக்கும், அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்தது. இதனை பார்த்ததும் பயந்து போன அவர்கள் ஓடி வந்து, மடத்தில் உள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
தடயவியல் பரிசோதனை
மேலும், இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலையில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். பின்னர் எலும்புக்கூடுகளை கைப்பற்றி, பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இந்த எலும்புக்கூடை வைத்து சோதனை நடத்தியதில், இறந்தவர் ஆண் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர் இறந்து 10 மாதங்களுக்கு மேல் இருக்கும் என்றும், அதன்காரணமாக எலும்புக்கூடாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கொன்று வீசினார்களா?
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இறந்தவர் யாரென்பதை கண்டறிய முதலில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பிறகு தான் இந்த வழக்கில் துப்பு கிடைக்கும். இதனால் எலும்புக்கூடை, டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் காணாமல் போனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.  பின்னர் இறந்து கிடந்தவரின் எலும்புக்கூடையும், காணாமல் போனவர்களையும் ஒப்பிட்டு சோதனை செய்யப்படும். அதன்பிறகு தான் இந்த வழக்கில் மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும். யாராவது கொன்று வீசினார்களா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என்பதை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தார்.
பரபரப்பு
மேலும் இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முட்புதரில் ஆண் எலும்புக்கூடு மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்