பயிர் காப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
கடந்த ஆண்டு சம்பா சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவற்றுக்கு பயிர் காப்பீடு வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர்;
கடந்த ஆண்டு சம்பா சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவற்றுக்கு பயிர் காப்பீடு வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் போராட்டம்
தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாரன் தலைமையில் தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், சந்திரசேகரன், ஒன்றிய தலைவர்கள் செல்லதுரை, ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், தாமோதரன், ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மனு கொடுக்க 5 பேர் மட்டும் செல்லுங்கள் என கூறினர். ஆனால் அதனை விவசாயிகள் ஏற்க வில்லை. கலெக்டர் அலுவலக வாயில் வரை சென்று பின்னர் மனு கொடுக்க 5 பேர் மட்டும் செல்வதாக தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் விவசாயிகளை உள்ளே செல்ல அனுமதித்தனர். இதையடுத்து விவசாயிகள் கலெக்டர் அலுவலக வாயில் வரை சென்று கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, டெல்டா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையினால் சம்பா நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சேதம் ஏற்பட்டது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தும், இன்னும் உரிய இழப்பீடு வழங்க வில்லை. எனவே பிரிமீயம் செலுத்திய இப்கோ டோக்கியோ நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொள்முதல் நிலையம்
டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், நஞ்சை நிலம், விளை நிலத்தை அரசால் கையகப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வழங்க வேண்டும். கர்நாடக அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேக தாதுவில் அணை கட்டுவதை தடுத்த நிறுத்த வேண்டும்.
குறுவை அறுவடை நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களை உடனே திறக்க வேண்டும். நெல்லுக்கு குண்டாலுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4 ஆயிரம் விலை நிரண்யிக்க வேண்டும் என கோஷங்கள்எழுப்பினர்.