விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

மேலூர் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-09-06 20:31 GMT
மேலூர்
மேலூர் அருகே விவசாயி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெட்ரோல் குண்டு வீசினர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் 6 பேர் அங்கு வந்தனர். பின்னர் அவர்கள் குமாரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்ததால் அந்த குண்டுகள் வெளியே பயங்கர சத்தத்துடன் வெடித்தது. 
இந்த சத்தம் கேட்டு வீட்டினுள் இருந்த குமார் மற்றும் அந்த பகுதி மக்கள் அங்கு வந்தனர். அவர்கள் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் மேலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
காரணம் என்ன?
விசாரணையில் குமாருக்கும், மதுரையை சேர்ந்த உறவினர் நந்தகுமார் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக தகராறு இருந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதும் காரணம் இருக்குமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்