தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம்
தேர்வை புறக்கணித்து ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
தொடக்க கல்வி பட்டய தேர்வு
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாரை சேர்ந்த ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் முதலாம், இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ-மாணவிகளுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. நேற்று காலை 2-ம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்தலும் நிலை இரண்டிற்கான தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுத 72 பேர் வந்திருந்தனர். அவர்களில் 2 மாணவர்கள், 35 மாணவிகள் என மொத்தம் 37 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.
புறக்கணிப்பு- போராட்டம்
மீதமுள்ள 3 மாணவர்கள், 32 மாணவிகள் தேர்வு எழுதுவதை புறக்கணித்து விட்டு ஆசிரியர் பயிற்சி மாணவ-மாணவிகளின் தேர்வு மற்றும் தேர்ச்சி முறையில் உள்ள குளறுபடியை உடனடியாக தமிழக அரசு களைந்திடக்கோரி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், கொரோனா கால கட்டத்தில் தொடர்ந்து 14 நாட்கள் நேரடியாக சென்று மையங்களில் தேர்வு எழுதுவதால், கொரோனா காரணமாக உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
ஆன்லைன் மூலம் தேர்வு
ஆசிரியர் பட்டயத்தேர்வை நேரடியாக தேர்வு மையங்களில் நடத்தாமல், ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தேர்வுக்கான மதிப்பெண் மதிப்பிடுவதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்து வருகிறார்கள். இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த கல்வியாண்டிற்கான தேர்வினையும் கால அவகாசம் வழங்காமல் உடனடியாக தொடங்கி விட்டனர். இந்த தேர்வினை ஒத்தி வைத்து உரிய கால அவகாசம் வழங்கி, மறு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பதையும், இன்டர்னல் மற்றும் எக்ஸ்டர்னல் மதிப்பெண்களை தேர்வில் சேர்க்காமல் இருப்பதையும் உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும், என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் தேர்வு மைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினா். இருப்பினும் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தேர்வை புறக்கணித்தனர்.