லாரி மோதி நர்சிங் மாணவி பலி

லாரி மோதி நர்சிங் மாணவி இறந்தார்.

Update: 2021-09-06 20:02 GMT
பெரம்பலூர்:

மொபட் மீது லாரி மோதல்
பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் திருப்பதி. இவரது மகள் செல்வகுமாரி (வயது 18). இவர் பெரம்பலூரில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கல்லூரி திறக்க இருப்பதால், கல்லூரி செல்வதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து கொள்வதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு செல்வகுமாரி தனது அண்ணன் கார்த்திக்குடன் (23) மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
குரும்பலூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த ராட்சத சிமெண்டு லாரி மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வகுமாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் செல்வகுமாரியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த டிரைவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகேசனை(49) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்