பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்த சூரசம்ஹாரம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.;

Update: 2021-09-06 19:01 GMT
திருப்பத்தூர்,

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.  இந்தாண்டும் கொரோனா பரவல் காரணமாக எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த விழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து காலை மற்றும் இரவு உற்சவர் கற்பகமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரவு சிம்ம வாகனம், நாக வாகனம், தங்க மூஷிக வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி காட்சியளித்தார்.. 6-ம் திருவிழாவான நேற்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கோவிலில் உற்சவர் கற்பக விநாயகர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சூரசம்ஹாரம்
இந்த நிலையில் மற்றொரு சப்பரத்தில் சூரன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரனை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது. இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரருடன், வெள்ளி யானை வாகனத்தில் தந்தத்துடன் வந்த கற்பகவிநாயகர் இரவு 7.10 மணிக்கு சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கற்பகவிநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது.கொரோனா தொற்று காரணமாக 9-ம் திருநாள் அன்று நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வருகிற 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று காலையில் சிறப்பு அலங்காரத்தில் கற்பகவிநாயகர் அருள்பாலிக்கிறார். பின்னர் கோவில் திருக்குளத்தில் பக்தர்கள் அனுமதியின்றி தீர்த்தவாரி உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் காரைக்குடி அ.ராமசாமி செட்டியார், வலையப்பட்டி மு.நாகப்ப செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்