கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது நடவடிக்கை

கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா எச்சரிக்கை விடுத்தார்.

Update: 2021-09-06 19:01 GMT
புதுச்சேரி, செப்.7-
கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருக்கும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா  எச்சரிக்கை விடுத்தார்.
கஞ்சா விற்பனை
புதுச்சேரி உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் பொறுப்பேற்ற உடன் மாநிலத்தில் கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கஞ்சா கும்பலை கைது செய்து வருகின்றனர்.
இருப்பினும் கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு போலீசார் சிலர் உடந்தையாக இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் புதுவை சட்டமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. அப்போது கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி எச்சரிக்கை விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் புதுவையில் சட்டம்- ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் டி.ஜி.பி. ரன்வீர் சிங் கிருஷ்ணியா தலைமை தாங்கி, பல்வேறு ஆலோசனைகள் கூறினார். 
அப்போது அவர் பேசுகையில், புதுச்சேரியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் கஞ்சா விற்பனை போலீசாருக்கு தெரிந்தே நடப்பதாக புகார் வந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் போலீசார் அனைவரும் கண்காணிக்கப்படுவீர்கள். கஞ்சா கும்பலுடன் யாராவது தொடர்பில் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் டி.ஜி.பி.
கூட்டத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 காரைக்கால் பகுதி போலீஸ் அதிகாரிகள் காணொலிக்காட்சி மூலமாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
---_____

மேலும் செய்திகள்