திருச்செங்கோட்டில் ஜன்னல் கம்பிகளை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி-ரூ.30 கோடி நகை, பணம் தப்பியது

திருச்செங்கோட்டில் ஜன்னல் கம்பிகளை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அங்கு பாதுகாப்பு அறையை உடைக்க முடியாததால் ரூ.30 கோடி நகை, பணம் தப்பியது.

Update: 2021-09-06 18:46 GMT
எலச்சிபாளையம்:
ஜன்னலை அறுத்து கொள்ளை முயற்சி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அரசு பொதுத்துறை வங்கி ஒன்று உள்ளது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர். மேலும் பலர் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். இதனிடையே கடந்த சனிக்கிழமை பணிகள் முடிந்து வங்கியை ஊழியர்கள் பூட்டி சென்றனர். நேற்று முன்தினம் விடுமுறை நாள் என்பதால் யாரும் வங்கிக்கு வரவில்லை. 
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஊழியர்கள் பணிக்கு வந்தனர். வங்கியை திறந்து உள்ளே சென்றபோது ஜன்னல் கம்பிகள் அறுக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது தெரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருச்செங்கோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.30 கோடி நகை, பணம் தப்பியது
அதன்பேரில் திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சிம்மா வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்போது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் வங்கியின் லைட்டுகள், கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்தும், ஜன்னல் கம்பிகளை அறுத்தும் உள்ளே நுழைந்ததும் தெரிந்தது. 
பின்னர் அவர்கள் நகைகள், பணம் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறையை உடைத்து திறக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் அதை உடைக்க முடியவில்லை. இதையடுத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு ஜன்னல் வழியாக தப்பி சென்றது தெரிய வந்தது. இதனால் பாதுகாப்பு அறையில் இருந்த ரூ.30 கோடி மதிப்பிலான நகைகள், பணம் தப்பியது.
பரபரப்பு
இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளர் லோகியா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்செங்கோட்டில் ஜன்னலை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்