கபிலர்மலையில் வாரச்சந்தைக்கு தடை: கடைகளை அகற்ற கூறியதால் விவசாயிகள் சாலை மறியல்

கபிலர்மலை வாரச் சந்தையில் கடைகளை அகற்ற அதிகாரிகள் கூறியதால் விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-06 18:46 GMT
பரமத்திவேலூர்:
வாரச்சந்தைக்கு தடை
கபிலர்மலையில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா 2-வது அலை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதையொட்டி கபிலர்மலை வாரச்சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது. 
இந்தநிலையில் இந்த தடை உத்தரவை மீறி நேற்று விவசாயிகள் வாரச்சந்தையில் கடைகளை அமைத்தனர். இதுகுறித்து அறிந்த கபிலக்குறிச்சி ஊராட்சி நிர்வாகத்தினர் தடை உத்தரவை மீறி கடைகள் அமைப்பது குற்றமாகும். எனவே கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினர்.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வாரச்சந்தை முன்பு ஜேடர்பாளையம்-பரமத்தி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வாரச்சந்தையை திறக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், வாரச்சந்தை மூடப்பட்டுள்ளதால் கபிலர்மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் குறைந்த தொகைக்கு அவற்றை வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் மற்றும் ஜேடர்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அதிகாரிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து விரைவில் வாரச்சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்