ராசிபுரம் அருகே நித்யானந்தாவின் பெண் சீடர்கள் விரட்டியடிப்பு-பொதுமக்கள் ஆத்திரம்

ராசிபுரம் அருகே காரில் வந்த நித்யானந்தாவின் பெண் சீடர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர். காரில் இருந்த பெண் மீட்கப்பட்டு அவரை மற்றொரு காரில் அனுப்பி வைத்தனர்.

Update: 2021-09-06 18:44 GMT
ராசிபுரம்:
நித்யானந்தா பக்தை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அய்யம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வசிப்பவர் ராமசாமி (வயது 62). விவசாயி. இவர் அதே பகுதியில் மளிகை கடையும் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அத்தாயி (52). இவர் நித்யானந்தாவின் தீவிர பக்தை ஆவார். இதனால் அத்தாயி கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று விட்டார். 
இதனிடையே அவர் ஆசிரமத்துக்கு செல்லும் முன்பு அவரது பெயரில் இருந்த வீடு மற்றும் கடையை அடமானம் வைத்து வங்கி ஒன்றில் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை ஆசிரமத்துக்கு எடுத்து சென்று விட்டார். கடனை திருப்பி செலுத்தாததால் வீடு ஜப்திக்கு வந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் கடனை செலுத்த முடிவு செய்தனர். ஆனால் வங்கி நிர்வாகத்தினர் அத்தாயி கையெழுத்திட்டால் தான் கடனை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்று தெரிவித்தனர்.
அழைத்து செல்ல வலியுறுத்தல்
இதனால் அவர்கள் பெங்களூரு ஆசிரமத்தில் இருந்த அத்தாயியை பலமுறை அழைத்தும், அவர் திரும்ப வரவில்லை. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் தனது குடும்பத்தாருடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனிடையே கடந்த ஒரு மாதமாக மகன் பழனிசாமி, இவருடைய மகள் சஸ்மிதா ஆகியோருடன் அத்தாயி செல்போனில் பேசி வந்துள்ளார். மேலும் ஆசிரமத்தில் தன்னை வெளியே விட மறுப்பதாகவும், நீங்கள் வந்து அழைத்து செல்லுங்கள் என்று வலியுறுத்தியதாகவும் தெரிகிறது. 
பெண் சீடர்கள் விரட்டியடிப்பு
இந்தநிலையில் நேற்று காலை 11 மணிக்கு பெங்களூருவில் இருந்து ஒரு காரில் நித்யானந்தாவின் 2 பெண் சீடர்களுடன், அத்தாயி அய்யம்பாளையத்துக்கு வந்தார். இதையறிந்து அந்த பகுதியில் அவருடைய உறவினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர்.  மேலும் அவர்கள் காரை சூழ்ந்து கொண்டு அத்தாயியை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறினர். இதனால் நித்யானந்தாவின் பெண் சீடர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே அத்தாயியை பொதுமக்கள் ஆம்னி வேன் ஒன்றில் ஏற்றி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர். இதற்கு பெண் சீடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் பயந்து போன 2 பெண் சீடர்களும் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர்.
பரபரப்பு
இந்த சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ராசிபுரம் அருகே பெண்ணை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மறுத்த நித்யானந்தாவின் பெண் சீடர்களை பொதுமக்கள் விரட்டியடித்த சம்பவம் நேற்று அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பட்டணம், வடுகம், புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் சிலர் பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் சிக்கி தவிப்பதாகவும், அவர்களை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்