ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்வதாக திருப்பத்தூர் கலெக்டர் கூறினார்
நானும் ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நல்லாசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிய கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசினார்.
திருப்பத்தூர்
நானும் ஆசிரியர் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நல்லாசிரியர்களுக்கு விருதுகளை வழங்கிய கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசினார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுகளை 8 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பெருமை கொள்கிறேன்
நமது மாவட்டத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் மாணவ- மாணவிகளுக்கு கதைகளைக் கூறி பாடங்களை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு எந்தப்பாடத்தில் விருப்பம் அதிகமாக உள்ளது எனக்கண்டறிந்து அதற்கு ஏற்ப பாடங்களை நடத்த வேண்டும்.
எனது அம்மா, அப்பா இருவரும் அரசு பள்ளி ஆசிரியர்கள். நானும் ஒரு ஆசிரியர் மகன் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன். மாணவர்களை விஷ்ணுகுப்தன் போன்ற கதைகளை படிக்கும் பழக்கத்தை தூண்ட வேண்டும். நான் தினமும் 150 முதல் 200 பக்கங்கள் புத்தகம் படித்து வருகிறேன். நான் படிப்பதன் காரணமாக என்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளும் புத்தகம் படிக்கிறார்கள். இந்திய ஆட்சிப் பணி பயிற்சியில் என்னுடன் பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே அரசு பள்ளியில் படித்தவர்கள்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராட்டு
தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களான கேத்தாண்டப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருண்குமார், கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஜனார்த்தனன், புதுப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆர்.செலினா, பூங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பிரதீப், மேல்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஜி.கஜலட்சுமி, சிந்தகமாணிபெண்டா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருண்குமார், சின்னவெங்காயபள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ச.செண்பகவல்லி, ஆம்பூர் பெத்தலகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி சி.சரவணன் ஆகியோரை கலெக்டர் அமர்குஷ்வாஹா, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் ஆகியோர் பாராட்டினர். மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, முனிமாதன், பள்ளித் துணை ஆய்வாளர்கள் தனராஜ், தாமோதரன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சுதர்சனம், பரணிதரன், வட்டார கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.