குடிநீர் வசதி செய்து தரக்கோரி பெண்கள் போராட்டம்

குடிநீர் வசதி செய்து தரக்கோரி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-06 17:49 GMT
திருவண்ணாமலை

குடிநீர் வசதி செய்து தரக்கோரி திருவண்ணாமலை  கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு பெட்டி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

இருப்பினும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் கலெக்டர் உள்ளிட்டஅதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்திற்கு வருகின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டு உள்ள மனு பெட்டியில் தங்களின் கோரிக்கை மனுக்களை செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மனு பெட்டியில் அவர்களது கோரிக்கை மனுவை செலுத்த வழியுறுத்தினர். பின்னர் அவர்கள் அதில் மனுவை செலுத்தினர்.

பணிகளில் முறைகேடு

செங்கம் தாலுகா செ.நாச்சிப்பட்டு ஊராட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

செ.நாச்சிப்பட்டு ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளிலும் முறைகேடுகள் நடைபெறுகிறது. கடந்த 1 ஆண்டு காலமாக ஊராட்சி மன்ற கூட்டத்தை கூட்டுவதில்லை. ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் எந்தவொரு வரவு, செலவு கணக்குகளையும் காட்டுவதில்லை. எனவே எங்கள் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளையும், பணிகளையும் நேரில் வந்து ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீர் நிலை ஆக்கிரமிப்பு 

தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையிலான நிர்வாகிகள், விவசாயிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- 

சேத்துப்பட்டு தாலுகா ராஜமாபுரம் கிராமத்தில் ஏரி நீர் பாசன கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை அரசு அலுவலகங்களில் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களோடு அரசு ஊழியர்கள் சிலர் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பாளர்களோடு இணைந்து செயல்படும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி அளித்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரத்து செய்ய வேண்டும்

வெம்பாக்கம் தாலுகா சிறுநாவல்பட்டு ஊராட்சி சித்தனக்கால் கிராமத்தை சேர்ந்த எம்.கிருஷ்ணன் (வயது 70) என்பவர்  அளித்த மனுவில் எனக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். எனது 2-வது மகன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து என்னை ஏமாற்றி, துன்புறுத்தி என்னுடைய சொத்தை எழுதி பட்டா மாற்றிக் கொண்டனர். என்னால் அவர்களை தட்டிக்கேட்க முடியவில்லை. எனவே இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுத்து நான் உயில் எழுதி வைத்த சொத்துக்களின் வருவாய் ஆவணங்கள் ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

பெண்கள் போராட்டம்

திருவண்ணாமலை தாலுகா காட்டுக்கொல்லை கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
அப்போது அவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 3 வருடங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. குடிநீர் தேவைக்காக தினமும் அவதிப்படுகிறோம். குடிநீருக்காக சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டி உள்ளது. எனவே எங்கள் கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றனர்.. 

பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 
இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்