உளுந்தூர்பேட்டை அருகே பயங்கரம் குடும்ப தகராறில் பெண் அடித்து கொலை
உளுந்தூர்பேட்டை அருகே குடும்ப தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்டார். மதுபோதையில் வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
உளுந்தூர்பேட்டை
தொழிலாளி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்து ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம்(வயது 37) தொழிலாளி. இவரது மனைவி பூமா(25). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
தகராறு
நேற்று காலை கணவன், மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம் மதுபோதையில் கட்டையால் பூமாவின் தலையில் பலமாக தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை அறிந்த சிவப்பிரகாசம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
துர்நாற்றம் வீசியது
இந்த நிலையில் மதியம் வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிவப்பிரகாசத்தின் வீட்டு கதவை திறந்து பார்த்தனர். அப்போது பூமா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
கணவர் கைது
பூமா கொலை செய்யப்பட்டதை அறிந்து அக்கம்பக்கத்தினரும், அவரது உறவினர்களும் வீட்டின் முன்பு திரண்டு கதறி அழுதனர். அவர்களிடம் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் பூமாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவப்பிரகாசத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப தகராறில் மனைவியை அவரது கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.