பரம்பிக்குளம் அணை நிரம்பியது
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பரம்பிக்குளம் அணை நிரம்பி இதற்கிடையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பரம்பிக்குளம் அணை நிரம்பி இதற்கிடையில் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பரம்பிக்குளம் அணை
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. அணை கேரள வனப்பகுதிக்குள் இருந்தாலும் பராமரிப்பு, நீர்வரத்தை கணக்கீடுதல், தண்ணீர் திறப்பு உள்ளிட்ட பணிகள் தமிழக பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோலையாறு அணையில் இருந்து மின் உற்பத்தி நிலையம்-1, சேடல் பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் அணைக்கு நீர்வரத்து உள்ளது.
நிரம்பியது
பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து திருமூர்த்தி, ஆழியாறு அணைகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இதன் காரணமாக 72 அடி கொள்ளளவு கொண்ட அணை இரவு முழுகொள்ளளவை எட்டி நிரம்பியது.
இதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை முழுகொள்ளவை எட்டியதால் பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
2,352 கனஅடி வெளியேற்றம்
சோலையார் அணையின் மின் உற்பத்தி நிலையம், சேடல் பாதை, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 2352 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 71.68 அடியாக உள்ளது.
அணையில் இருந்து மதகுகள் வழியாக வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து சுரங்கபாதை வழியாக தூணக்கடவிற்கு வினாடிக்கு 1352 கன அடி திறக்கப்பட்டு உள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறோம். பரம்பிக்குளம் அணையில் இருந்து உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு உள்ளதால் கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மில்லிமீட்டர்) விவரம் வருமாறு:-
சோலையார் 37 மி.மீ., பரம்பிக்குளம் 29, ஆழியாறு 6.6, திருமூர்த்தி 3, வால்பாறை 42, மேல்நீராறு 70, கீழ்நீராறு 37, காடம்பாறை 9, மணக்கடவு 19, தூணக்கடவு 25, பெருவாரி பள்ளம் 17, அப்பர் ஆழியாறு 2, நவமலை 3, பொள்ளாச்சி 29, நல்லாறு 3, நெகமம் 7 மி.மீ.