மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி
பெண் டாக்டர் உள்பட 4 பேர் மீது வழக்கு
விழுப்புரம்,
விழுப்புரம் கே.கே.சாலையை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 58). இவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில், நான் எனது நண்பரான விழுப்புரம் தனலட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த திருமாறன் என்பவரின் மகளுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தரும்படி மரக்காணம் அடுத்த உப்புவேலூரை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரிடம் கேட்டோம். அதற்கு பன்னீர்செல்வம், அவரது மகன் டாக்டர் ஸ்ரீநிவாஸ் மற்றும் புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த சீத்தாராமன், அவரது மகள் டாக்டர் சபரிஸ்ரீ ஆகிய 4 பேரும் என்னை நேரில் சந்தித்து மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தர ரூ.1 கோடியே 5 லட்சம் செலவாகும் என்று கூறினர்.
மேலும் அவர்கள் 4 பேரும் கடந்த 25.4.2017 அன்று மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.1 கோடியே 5 லட்சத்தை பெற்றுச்சென்றனர். ஆனால் 2017-2018-ம் கல்வியாண்டு முடிந்தும் மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித்தராமல் பணத்தை மோசடி செய்துவிட்டனர். பணத்தை திருப்பித்தரும்படி கேட்ட எனக்கு அவர்கள் 4 பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பன்னீர்செல்வம், டாக்டர் ஸ்ரீநிவாஷ், சீத்தாராமன், டாக்டர் சபரிஸ்ரீ ஆகிய 4 பேர் மீது நம்பிக்கை மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பன்னீர்செல்வம், தனது மகன் டாக்டர் ஸ்ரீநிவாசுடன் சேர்ந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த துக்காராம் என்பவரிடம், அவருடைய மகனுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி ரூ.43 லட்சத்தை பெற்று மோசடி செய்துள்ளதும், அந்த வழக்கில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் டாக்டர் ஸ்ரீநிவாசை கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.