மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
பக்தர்களின்றி எளிமையாக நடந்தது
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அமாவாசைதோறும் ஊஞ்சல் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூறி அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். தற்போது கொரோனா பரவல் காரணமாக அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடத்தக்கூடாது எனவும், மேலும் அன்றைய தினம் ஊஞ்சல் உற்சவத்தை கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அதன்அடிப்படையில் நேற்று ஆவணி மாத அமாவாசை என்பதால் கோவில் உள்பிரகாரத்தில் எளிமையாக ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி அதிகாலை கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து உற்சவ அம்மனுக்கு விஷ்ணுதுர்கை அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரவு 7 மணியளவில் பம்பை மேள முழங்க அம்மன் கோவிலை வலம் வந்து உட்பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அம்மன் எழுந்தருளினார். அதன்பிறகு பூசாரிகள் பக்திப் பாடல்களைப் பாடினர். அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு 7.45 மணிக்கு அம்மனுக்கு உதிரி பூக்கள், குங்குமம் ஆகியவற்றால் அர்ச்சனை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பூசாரிகள் மட்டுமே சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதிக்கவில்லை. ஊஞ்சல் உற்சவம் சமூக வளைதலங்களில் நேரடியாகி ஒளிபரப்பு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் கோவிந்தராஜி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.