அரசின் கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டார்
திருப்பத்தூர்
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி கேட்டுக்கொண்டார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கான கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி பேசியதாவது:-
ஒத்துழைக்க வேண்டும்
பொதுநலன் கருதி விழாக்களுக்கு அரசு கட்டுப்பாடு விதித்திருக்கிறது. கொரோனா 2-வது அலைக்கு பின் எந்த விழாக்களுக்கும் அனுமதி அளிக்கவில்லை. மாநில அளவில் பல்வேறு துறைகளுடன் ஆலோசித்து விழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 2-வது அலையில் எந்த அளவு உயிரிழப்பு ஏற்பட்டது என்பதை நினைத்துப் பார்த்து அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அப்போது விநாயகர் சதுர்த்தி பாரம்பரியமாக கொண்டாடப்படும் விழா. எனவே இந்த விழாவை கொண்டாட தடைவிதிக்க கூடாது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என அனைவரும் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.