சுருளியாறு நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் வரும் ராட்சத குழாயில் உடைப்பு சீரமைக்கும் பணி தீவிரம்
சுருளியாறு நீர்மின் நிலையத்துக்கு தண்ணீர் வரும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டது. அதனை சீரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் சுருளியாறு நீர்மின் நிலையம் அமைந்துள்ளது. இது 1978-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்து வைக்கப்பட்டது. மேகமலையில் உள்ள இரவங்கலாறு அணை நீர்த்தேக்கத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய் வழியாக தண்ணீர் கொண்டுவரப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இங்கு தினமும் 35 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பராமரிப்பு பணிகள் நடைபெறும்.
குழாயில் உடைப்பு
இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி மாலை இரவங்கலாறு அணையில் இருந்து மின்உற்பத்திக்கு வரும் ராட்சத தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறி மலைப்பகுதியில் ஆறாக ஓடியது. மேலும் நீர்மின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தியாகும் பணி தடைபட்டது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.. மின்சாரம் தயாரிக்கும் பணிகள் பாதியில் நின்றது.
பின்னர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வனப்பகுதிக்கு சென்று குழாய் இணைப்பு உள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது தண்ணீர் வரும் குழாயில் 12-வது இணைப்பு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து உடனடியாக இரவங்கலாறு அணையில் இருந்து தண்ணீர் வருவது தடுத்து நிறுத்தப்பட்டது.
சீரமைக்கும் பணி
இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், நீர்மின் நிலையத்திற்கு 979.15 மீட்டர் உயரத்தில் உள்ள இரவங்கலாறு அணையில் இருந்து 74 இணைப்புகளுடன் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது 12-வது இணைப்பு பகுதி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. சேதம் அடைந்துள்ள குழாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர்.
சுருளியாறு நீர்மின் நிலையத்தில், ஆசியாவிலேயே 2-வது உயரமான இடத்திலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.