தேனி ஆயுதப்படை மைதானத்தில் 682 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 6 பஸ்களில் மாணவர்களை ஏற்ற தடை

தேனி ஆயுதப்படை மைதானத்தில் 682 தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 6 பஸ்களில் மாணவர்களை ஏற்ற தடை விதிக்கப்பட்டது.

Update: 2021-09-06 15:35 GMT
தேனி:

தேனி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேனி ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை, போலீஸ் துறை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூட்டாக இணைந்து தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அதுபோல், உத்தமபாளையத்தில் ஆய்வு நடத்தப்பட்ட வாகனங்களும் மேலாய்வுக்காக இங்கு கொண்டு வரப்பட்டன.
கலெக்டர்-போலீஸ் சூப்பிரண்டு
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணியை மாவட்ட கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் இணைந்து பார்வையிட்டனர். அவர்கள் இருவரும் வாகனங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாகனத்தின் பள்ளியின் விவரம், தொடர்பு எண்கள், பிரேக் திறன், அவசரவழி கதவுகளின் நிலை, வாகனத்தின் கதவுகள் இயக்க நிலை, இருக்கைகள், படிக்கட்டுகள், டிரைவர் இருக்கை, வாகனத்தின் உள்பகுதியில் உள்ள தரைப்பலகை, முதலுதவி பெட்டிகள், தீயணைக்கும் கருவிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை சரியான முறையில் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது.
6 வாகனங்களுக்கு தடை
தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் 64 பள்ளிகளை சேர்ந்த 427 வாகனங்கள், உத்தமபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் 37 பள்ளிகளை சேர்ந்த 255 வாகனங்கள் என மொத்தம் 682 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 6 பஸ்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அந்த பஸ்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த வாகனங்களில் குறைகளை சரிசெய்து விட்டு மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஆய்வுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், மீண்டும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய பிறகே அவற்றில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேஷ் விஸ்வநாத், மனோகர், தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்