பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் வீடுகளுக்கு முன்பாக தேங்கும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
வீரபாண்டி
திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியில் வீடுகளுக்கு முன்பாக தேங்கும் கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருப்பூர் 57வது வார்டு வஞ்சிபாளையம் சீனிவாச நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல வருடங்களாக தார்ச்சாலை மற்றும் சாக்கடை கால்வாய் வசதி இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சீனிவாசா நகர் பகுதி முழுவதும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பல்வேறு பகுதிகளில் தேக்கமடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் நேற்று ஆத்திரமடைந்த பொதுமக்கள் கழிவு நீரை அகற்றக்கோரி மாநகராட்சியை கண்டித்து பலவஞ்சிபாளையம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது மாநகராட்சியிடம் இது குறித்து பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இனிவரும் காலங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் ஊர் மக்கள் ஒன்றாக சேர்ந்து மாபெரும் போராட்டத்தையும், சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றனர்.
பேச்சுவார்த்தை
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கீதா சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
----------------