கொய்யாவை தாக்கும் தேயிலை கொச
உடுமலை பகுதியில் தேயிலை கொசுக்கள் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
போடிப்பட்டி, செப்.7-
உடுமலை பகுதியில் தேயிலை கொசுக்கள் தாக்குதலால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பழ வகைப்பயிர்கள்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதேநேரத்தில் பழவகைப் பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்றவை சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர். கொய்யாவில் தேயிலைக் கொசுக்களின் தாக்கத்தால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொய்யாப் பழங்களின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தால் சந்தைப்படுத்துவதில் சிரமம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உடுமலையையடுத்த சர்க்கார்புதூர் பகுதியில் இயற்கை முறையில் கொய்யா சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது
ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் சாகுபடி மேற்கொள்ளுவதில் பல சவால்கள் உள்ளது. இயற்கை முறை சாகுபடி மேற்கொள்ளும் போது பெரும்பாலும் தீர்வுகளுக்காக முன்னோடி விவசாயிகளையே அணுக வேண்டிய நிலை உள்ளது. எனவே அனைத்து விதமான வேளாண் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் இயற்கை விவசாயிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.
உறக்க நிலை
தேயிலைக் கொசு சக்தி படைத்தவையாக உள்ளது. தேயிலைக் கொசுக்களின் இளம் குஞ்சுகள் மற்றும் பூச்சிகள் கொய்யாவின் இலைகள், தண்டுகள் மற்றும் காய்களிலிருந்து சாறை உறிஞ்சுகின்றன. இதனால் இலைகள் காய்ந்து விடுவதுடன் அதிகம் பாதிக்கப்பட்ட பிஞ்சுகள் உதிர்ந்து விடுகின்றன.
அத்துடன் இவை சாறு உறிஞ்சிய பகுதியில் பிசின் போன்ற திரவம் வடிவதுடன் காய்களில் கொப்புளம் போன்ற தோற்றம் உருவாகி விடுகிறது. இதனால் அவற்றை சந்தையில் விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இயற்கை முறையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவருடைய தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது
‘வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் தேயிலைக் கொசுக்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் பெறப்படும். பொதுவான வழிமுறைகளாக ஏக்கருக்கு 40 என்ற அளவில் மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். ஒரு லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் பவேரியா பூஞ்சாணத்தை ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்கலாம்'
என்று அவர் கூறினார்.
-