தாராபுரம்
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 238 மாணவர்களும், 138 மாணவிகளும் என மொத்தம் 376 பேர் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியில் தாராபுரம் பெரியார் நகரை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்து வந்தாக தெரிகிறது.
இதையடுத்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் அவருக்கும், மனைவி, மகன் மற்றும் தாயார் ஆகிய 4 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் ஆசிரியர் மற்றும் அவரது மனைவி, மகன், தாயார் ஆகிய 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பெரியார் நகர் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதற்கிடையே தொற்று பாதிப்புக்கு உள்ளான ஆசிரியர் பள்ளிக்கு செப்டம்பர் 1ந்தேதி மட்டும் வந்து சென்றுள்ளார். இதனால் மாணவமாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.