ஈரோட்டில், கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6,817 பேர் மீது வழக்கு; ரூ.4¾ லட்சம் அபராதம் வசூல்
ஈரோட்டில், கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6 ஆயிரத்து 817 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.;
ஈரோடு
ஈரோட்டில், கடந்த ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 6 ஆயிரத்து 817 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.4¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
வாகன சோதனை
ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கவும், சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவருடைய உத்தரவின் பேரில் ஈரோடு போக்குவரத்து துணை போலீசார் மாநகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்தல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
6,817 பேர் மீது வழக்கு
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பல்வேறு வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டிவந்ததாக 5 ஆயிரத்து 487 பேர், சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்கள் 146 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதாக 32 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்தவர்கள் 53 பேர், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்ததாக 201 வழக்குகள் உள்பட மொத்தம் 6 ஆயிரத்து 817 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக வாகன ஓட்டிகளிடம் இருந்து மொத்தம் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 900 அபராதமும் வசூலிக்கப்பட்டு உள்ளது.