திருச்சி
மதுரை பழங்கானத்தம் டி.வி.எஸ்.நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 60). இவருடைய மகள் திருச்சி பாபுரோட்டில் வசித்து வருகிறார். மகளை பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்த இளங்கோவன் நேற்று பகல் தனது பேத்தியுடன் மதுரைக்கு புறப்பட்டார். திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறி மத்திய பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார். அந்த பஸ் தலைமை தபால் நிலையத்தில் இருந்து பாரதியார் சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். இதை கண்ட சக பயணிகள் பஸ் டிரைவரிடம் தெரிவித்தனர். உடனே அதே பஸ்சை திருப்பி அரசு மருத்துவமனைக்கு ஓட்டி சென்று, அங்கு அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே இளங்கோவன் நெஞ்சு வலியால் இறந்தாரா? அல்லது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் தவறி விழுந்து நெஞ்சு வலி ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.