காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது
குமரி மாவட்டத்தில் வெடி வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டத்தில் வெடி வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதிரடி சோதனை
குமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள தெற்கு மலை பகுதியில் சிலர் நாட்டு வெடி வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடுவதாக பூதப்பாண்டி வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனவர் ரமேஷ், வன காப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஆல்வின், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் தெற்கு மலை பூங்கன் வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
3 பேரை பிடித்தனர்
அப்போது, 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலும் 2 பேர் வேட்டையாடிய பன்றி இறைச்சியுடன் வனப்பகுதிக்குள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு 2 பேர் வேட்டையாடிய பன்றி இறைச்சிகளுடன் இருப்பதை கண்டனர். வனத்துறையினரை கண்டதும் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற 3 பேரையும் பிடித்து ஆரல்வாய்மொழியில் உள்ள வனச்சரகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
நாட்டு வெடி வைத்து...
விசாரணையில், அவர்கள் காட்டுப்புதூர் பூமணி நகரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் (வயது 28), குமாரபுரம் தோப்பூரை சேர்ந்த மாணிக்கம் (33), ஏசுவடியான் (48) என்பதும், வனப்பகுதியில் கோழி கழிவில் நாட்டு வெடி வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து, பன்றி இறைச்சிகள், வேட்டைக்கு பயன்படுத்திய நாய், 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடிய இறச்சகுளத்தைச் சேர்ந்த அஜித் என்பவரை தேடி வருகிறார்கள்.