19 கோவில்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் அதிரடி கைது

குமரி மாவட்டத்தில் 19 கோவில்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிலோ வெண்கல குத்துவிளக்குகள் மீட்கப்பட்டன.

Update: 2021-09-05 20:12 GMT
திங்கள்சந்தை, 
குமரி மாவட்டத்தில் 19 கோவில்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து 600 கிலோ வெண்கல குத்துவிளக்குகள் மீட்கப்பட்டன.
கோவில்களில் தொடர் கொள்ளை
குமரி மாவட்டத்தில் உள்ள கோவில்களை குறி வைத்து கொள்ளை சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக இரணியல் போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
மேலும் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் மேற்பார்வையில் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்மூர்த்தி, ஜான் போஸ்கோ, சரவணகுமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
மூடையுடன் வந்த வாலிபர்
இந்தநிலையில் குருந்தன்கோடு அருகே ஆசாரிவிளை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் மூடையுடன் செல்வதை போலீசார் கண்டனர்.
உடனே அவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், மூடையில் குத்து விளக்குகள் மற்றும் பூஜை பொருட்கள் இருந்தது. விசாரணையில், சரல் அன்னை தெரசா சாலை பகுதியை சேர்ந்த அனிஷ் ராஜன் என்ற அனிஷ் (வயது 33) என்பதும், பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது.
வாலிபர் கைது 
இதையடுத்து அனிஷ்ராஜனை இரணியல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று துருவி, துருவி விசாரணை நடத்தியதில், குமரி மாவட்டத்தில் கோவில்களில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் என்ற தகவலும் வெளியானது.
இரணியல், மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை சுசீந்திரம், ஆசாரிபள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அனீஷ்ராஜன் 2 பேருடன் சேர்ந்து கைவரிசை காட்டியது தெரியவந்தது.
இரணியல் போலீஸ் நிலையத்தில் 10 வழக்குகளும், மணவாளக்குறிச்சியில் 4 வழக்குகளும், வெள்ளிச்சந்தையில் 3 வழக்குகளும், சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் என 20 கொள்ளை வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருந்தது. அதை தொடர்ந்து அனிஷ் ராஜனை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை தேடிவருகின்றனர்.
குத்துவிளக்குகள் பறிமுதல்
பின்னர் அனிஷ்ராஜனிடமிருந்து கோவில்களில் திருடிய 600 கிலோ வெண்கல குத்துவிளக்குகள் மற்றும் ஒரு வீட்டில் திருடிய 2 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை மீட்டனர். 
மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொள்ளையடிக்கப்பட்டவை. அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது. 
மேலும் 2 பேருக்கு தொடர்பு
மேலும், அனிஷ்ராஜனுடன் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். 
குமரி மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கைவரிசை காட்டியதாக பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்