வருகிற 11-ந் தேதி நாமக்கல்லில் தேசிய மக்கள் நீதிமன்றம்

நாமக்கல்லில் வருகிற 11-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

Update: 2021-09-05 18:19 GMT
நாமக்கல்:
இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. 
ஏற்கனவே கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ள கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கி கடன்கள், கல்வி கடன்கள் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள் அடங்கிய உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்துவரி தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும்.
சமரச முறையில் தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மக்கள் நீதிமன்றம் மூலமாக முடித்து கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே பொதுமக்கள் மேலே குறிப்பிடப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்