சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவெண்காடு:
சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என பூம்புகாரில் நடந்த மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தின் தலைமை மீனவ கிராமமான பூம்புகாரில் நேற்று மீனவ பஞ்சாயத்தார்கள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அடங்கிய கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பூம்புகார் மீனவர் கிராம பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திர பாடி, மடவாமேடு உள்ளிட்ட 18 மீனவ கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் சுருக்குமடி வலையை கொண்டு மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.
சுருக்குமடி வலை
அதேபோல் நாகை மாவட்டத்தில் 12 மீனவ கிராமங்களில் அதிக அளவில் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தற்போது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
எனவே இரு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சுருக்கு மடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க உடனடியாக தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
முதல்-அமைச்சரிடம் மனு
மீனவ கிராம பொறுப்பாளர்கள் விரைவில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது, சுருக்குமடி வலை பிரச்சினை சம்பந்தமாக மீனவர்களை அழைத்து பேசி சுமுக தீர்வு காண மயிலாடுதுறை மாவட்ட கலெக்டரை கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.