கடும் குடிநீர் தட்டுப்பாடு

முள்ளிமுனை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2021-09-05 17:22 GMT
தொண்டி, 
முள்ளிமுனை கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
காவிரி கூட்டுக்குடிநீர்
திருவாடானை யூனியன் முள்ளிமுனை கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடற்கரை கிராமமான இங்கு காலம்காலமாக குடிநீர் பிரச்சினை இருந்து கொண்டே வருகிறது. இங்கு கண்மாய், ஊருணி, கிணறு வசதிகள் ஏதும் இல்லை. எங்கு தோண்டி னாலும் கடல் நீர் தான் கிடைக்கிறது. இந்த கிராமத்திற்கு விருந்தினர் வருவதுபோல் தற்போது மாதம் ஒரு முறை மட்டுமே காவிரி கூட்டுக்குடிநீர் வருகிறது. 
இதனால் இங்குள்ள மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்-அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வலியுறுத்தி வருகின்றனர். 
இதுகுறித்து ஊராட்சி தலைவர் அமிர்தவல்லிமேகமலை கூறியதாவது:- திருவாடானை யூனியனில் உள்ள கடைசி கிராமம் முள்ளிமுனை. இதனால் இங்கு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாக இருந்து வருகிறது. 
வேறு குடிநீர் வாய்ப்புகள் இல்லாத நிலையில் காவிரி குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சோளியக்குடி கிராமத்தில் இருந்து காவிரி கூட்டுகுடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப் படுவதால் வரும் வழியில் பல கிராமங்களில் தண்ணீர் வீணாக்கப்படுகிறது. 
இணைப்பு
இதனால் கடந்த 2017-18-ம் நிதியாண்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் சோழியக்குடி காவிரி கூட்டுக்குடிநீர் நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து தனி குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்றது. ஆனால் தனி குடிநீர் இணைப்பில் தற்போது வேறு ஊராட்சிகளுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளதால் இதனையொட்டி தற்போது மீண்டும் பழைய நிலைக்கு இந்த கிராமம் தள்ளப்பட்டு உள்ளது. தற்போது கடும் குடிநீர் பிரச்சினை எழுந்துள்ளது. மாதம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. இங்குள்ள அனைவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். 
நடவடிக்கை
கடலுக்கு செல்பவர்கள் கரை திரும்பிய உடன் குளிக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வசதி இல்லை. குளிப்பதற்காக சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கண்மாய் ஊரணிகளில் குளித்துவருகிறோம். வறுமை நிலையில் உள்ள இந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பமும் குடிநீருக்காக மாதந் தோறும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகிறோம். இந்த நிலை என்று தீரும் என தெரியவில்லை. கடைக்கோடி கிராமமான முள்ளிமுனை கிராமத்திற்கு தினமும் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்