காட்டுமன்னார்கோவில் அருகே நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை சூழ்ந்த தண்ணீர்
காட்டுமன்னார்கோவில் அருகே வாய்க்காலில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட வயல்களை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த நாரைக்கால் ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் இந்த ஏரியின் மூலம் கண்டமங்கலம், வீராணநல்லூர், டி.மடிப்புரம், குருங்குடி, நாட்டார்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 600 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக வெட்டு வாய்க்கால் மூலம் ஆண்டுதோறும் தண்ணீர் திறந்து விடப்படும்.
நேரடி நெல் விதைப்பு
இந்நிலையில் கீழணையில் இருந்து பாசனத்திற்காக கடந்த 29-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையொட்டி காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அதேபோல் கண்டமங்கலம் கிராமத்திலும் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர்.
இதற்கிடையே சிதம்பரம்-திருச்சி சாலையில் 4 வழிச்சாலை அமைப்பதற்காக விளைநிலங்கள், வீடுகள், மனைகள் கையகப்படுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிக்காக நாரைக்கால் ஏரியில் இருந்து மண் எடுக்கப்படுகிறது. இந்த பணிக்காக வெட்டு வாய்க்காலில் இருந்து நாரைக்கால் ஏரிக்கு தண்ணீர் செல்லாத வகையில் 3 இடங்களில் மண்ணால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலை
இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்ல தடை ஏற்பட்டதால், அந்த தண்ணீர் கண்டமங்கலம் பகுதியில் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட சுமார் 200 ஏக்கர் விளை நிலங்களுக்குள் புகுந்து சூழ்ந்துள்ளது. மேலும் தினசரி மழை பெய்து வருவதாலும் விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். மேலும் தண்ணீரை வடிய வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதோடு, உரிய இழப்பீடும் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.