செந்நாய்கள் கடித்து ஆடு செத்தது

செந்நாய்கள் கடித்து ஆடு செத்தது

Update: 2021-09-05 16:13 GMT
தளி:
உடுமலை தளி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் தென்னை, வாழை, பாக்கு போன்ற நீண்ட காலபயிர்கள், காய்கறிகள், கீரை வகைகள், தானியங்களை சாகுபடி செய்து வருவதுடன் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பையும் உப தொழிலாக செய்து வருகின்றனர். இந்த சூழலில் தளி அருகே உள்ள ஜிலோபநாய்க்கன்பாளையம் பகுதியில் பலத்த காயங்களுடன் உடல் சிதறிய நிலையில் ஆடு ஒன்று மர்மான முறையில் செத்துக்கிடந்தது.
இது குறித்த தகவலை பொதுமக்கள் உடுமலை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் உத்தரவின் பேரில் வனவர் தங்க பிரகாஷ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் இறந்து கிடந்த ஆட்டுக்கு கால்நடை டாக்டர் அரவிந்தன் மூலமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில் செந்நாய்கள் கடித்து ஆடு பலியானது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மலையடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் செந்நாய்கள் நடமாட்டம் உள்ளதா? என்றும் கண்காணித்து வருகின்றனர். அவ்வாறு இருந்தால் அதை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தனர். அத்துடன் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்