9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

தேனி மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதை கலெக்டர் வழங்கினார்.

Update: 2021-09-05 16:03 GMT
தேனி: 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 9 ஆசிரியர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் அந்தந்த மாவட்டங்களில் ஆசிரியர் தின விழா நடத்தி நல்லாசிரியர் விருதுகளை மாவட்ட கலெக்டர் கையால் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி 9 ஆசிரியர்களுக்கும் மாநில நல்லாசிரியர் விருதை வழங்கி பாராட்டி பேசினார். 

இந்த விருதுடன் ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது. இதில் சண்முகசுந்தரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சன் தனக்கு விருதுடன் வழங்கிய ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக விழாவில் அறிவித்தார். 

அதன்படி அவர் அந்த காசோலையை மாவட்ட கலெக்டரிடம் கொடுத்தார். அவருக்கு கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராகவன், பாலாஜி, திருப்பதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்