வேடசந்தூர் அருகே கிராம மக்கள் ஆத்திரம் மனைவியின் கல்வி சான்றிதழை கொடுக்க மறுத்ததால் மாமனாரை வெட்டி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேரை கட்டி வைத்து தர்மஅடி

வேடசந்தூர் அருகே மனைவியின் கல்வி சான்றிதழை கொடுக்க மறுத்த மாமனாரை அரிவாளால் வெட்டி கொல்ல முயன்ற மருமகன் உள்பட 3 பேரை, பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-09-05 14:55 GMT
வேடசந்தூர்:
சென்னை முகப்பேரை சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 29). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காக்காத்தோப்பை சேர்ந்தவர் உமாபதி. அவருடைய மகள் ஆர்த்தி (28). இவர், சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றினார். 
அப்போது ஆர்த்தியும், சத்தியநாராயணனும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு ஆர்த்தி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் எதிர்ப்பை மீறி, அவர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கல்வி சான்றிதழ்களை வாங்க...
காதல் திருமணம் செய்த சத்தியநாராயணனும், ஆர்த்தியும் சென்னையில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் ஆர்த்தியின் கல்விச்சான்றிதழ்கள், காக்காத்தோப்பில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் இருந்தது. 
அந்த சான்றிதழ்களை வாங்குவதற்காக சென்னையில் இருந்து சத்தியநாராயணன் மற்றும் அவரது நண்பர்கள் கலையரசன் (25), தீபக்குமார் (28) ஆகியோர் நேற்று காலை காக்காத்தோப்பு வந்தனர்.
பின்னர் உமாபதியின் வீட்டுக்கு சத்தியநாராயணன் மற்றும் அவருடைய நண்பர்கள் சென்றனர். வீட்டில் இருந்த உமாபதியிடம் ஆர்த்தியின் கல்விச்சான்றிதழ் வேண்டும் என்று அவர்கள் கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

 கட்டி வைத்து தர்மஅடி

தகராறு முற்றவே, சத்தியநாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் உமாபதியை வெட்ட முயன்றார். ஆனால் உமாபதி விலகிகொண்டதால் அவர் காயமின்றி தப்பினார். 
இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது கிராமத்தை சேர்ந்த ஒருவரை வெளியூரை சேர்ந்த 3 பேர் வெட்ட முயன்ற சம்பவம் கிராம மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டனர்.
மேலும் சத்தியநாராயணன் மற்றும் அவருடன் வந்த கலையரசன், தீபக்குமார் ஆகியோரை மடக்கி பிடித்தனர். பின்னர் அருகே இருந்த கம்பி வேலியில் கயிற்றால் கட்டி வைத்து 3 பேருக்கும் தர்மஅடி கொடுத்தனர். 

3 பேர் கைது

இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
மேலும் இது தொடர்பாக வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் உமாபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்தியநாராயணன், கலையரசன், தீபக்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்