முதலை கடித்து விவசாயி சாவு

பல்லாரி அருகே ஆற்றில் குளித்து கொண்டு இருந்த போது, முதலை கடித்து விவசாயி இறந்தார். அவரது உடலை தேடும் பணி நடந்து வருகிறது.

Update: 2021-09-04 21:58 GMT
பல்லாரி:

முதலை கடித்து சாவு

  பல்லாரி மாவட்டம் சிருகுப்பா தாலுகா தேக்கலகோட்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரேஷ்(வயது 38). விவசாயி. இந்த நிலையில் நேற்று கிராமத்தில் ஓடும் ஆற்றில் வீரேஷ் உள்ளிட்ட சிலர் குளித்து கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் ஆற்றுக்குள் கிடந்த முதலை ஒன்று வீரேசை பிடித்து இழுத்து சென்று கடித்து கொன்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

  பின்னர் இச்சம்பவம் குறித்து தேக்கலகோட்டே போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரும், வனத்துறையினரும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்று கொண்டனர்.

வனத்துறையினர் மீது குற்றச்சாட்டு

  மேலும் தீயணைப்பு படையினர், உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் வீரேசின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரது உடல் நேற்று கிடைக்கவில்லை. அவரது உடலை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த 2 வாரத்திற்கு முன்பு தான் இதே ஆற்றில் முதலை கடித்து ஒருவர் இறந்தார்.

  அப்போதே அந்த முதலையை பிடிக்க வேண்டும், முதலை ஆற்றில் இருப்பதாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். ஆனால் கிராம மக்களின் கோரிக்கையை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. வனத்துறையினரின் அலட்சியத்தால் தான் தற்போது முதலைக்கு 2-வது உயிர் பறிபோய் உள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்