சூறைக்காற்றுடன் பலத்த மழை
அதிராம்பட்டினம், பேராவூரணியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம், பேராவூரணியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அதிராம்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அப்போது சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்தநிலையில் அதிராம்பட்டினத்தில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். கடலோர பகுதியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் மட்டும் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் காற்று வீச தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகரித்து பலத்த சூறைக்காற்றாக வீச தொடங்கியது. இதில் தென்னை உள்ளிட்ட அனைத்து மரங்களும் காற்றின் வேகத்துக்கு தாக்குபிடிக்க முடியாமல் அசைய தொடங்கியது.
கஜா புயல்
இதனால் பொதுமக்கள் மீண்டும் கஜா புயல் போல் வந்து விடுமோ? என்ற அச்சத்தில் உறைந்தனர். காற்றின் வேகம் அதிகரித்து வந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் புதுக்கோட்டை உள்ளூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மரம் வேரோடு சாய்ந்து நடு ரோட்டில் விழுந்தது. இதனால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பின்னர் மரத்தை அப்புறப்படுத்திய பிறகு இயல்பு நிலை திரும்பியது. சிறுது நேரத்தில் அதிராம்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.
இதனால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. காற்று பலமாக வீசியதால் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர். இதைப்போல பேராவூரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
அதிராம்பட்டினம் கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது கடலில் பலத்த காற்று வீசி வருவதால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பி வருகின்றனர். நேற்று மாலை காற்றின் வேகத்தால் அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் மீனவர்கள் துறைமுக பகுதிகளுக்கு சென்று தங்களது படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பாக வைத்தனர். அதிராம்பட்டினம் கிராம பகுதியில் மழை பெய்து வருவதால் விவசாயத்துக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
மின்கம்பி அறுந்து விழுந்தது
திருச்சிற்றம்பலம் பகுதியில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள மடத்திக்காடு ஊராட்சி மன்ற வளாகத்தில் சாலையோரம் இருந்த ஒரு தென்னை மரம் வேருடன் சாய்ந்து, அங்கிருந்த மின்கம்பத்தில் விழுந்தது. இதனால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இருப்பினும் அதிஷ்டவசமாக யாருக்கும் உயிர்சேதம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சுதாசினி சுப்பையன் மின்வாரிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மரத்தை அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.