நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலுக்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 2 எம்.பி.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கலுக்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 2 எம்.பி.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம்
ரெயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கி வருகிறது. இதற்கு எதிர்ப்பு ெதரிவித்து குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் மாநில துணைத்தலைவர் ராபர்ட் புரூஷ், மாவட்ட பொருளாளர் பாபு ஆண்டனி, மாநகர தலைவர் அலெக்ஸ், நிர்வாகிகள் சீனிவாசன், தங்கம் நடேசன், மகேஷ் லாசர், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் போராட்டம்
ஆர்ப்பாட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. பேசும் போது, “கொரோனா காரணமாக பொதுமக்கள் ஏராளமானோர் வேலை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும் ஜி.எஸ்.டி.யால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு நினைக்கிறது. எனவே இந்த ஆட்சியை அப்புறப்படுத்த மக்கள் தயாராக வேண்டும். ராகுல் காந்தி பிரதமராக வந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும். இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்" என்றார்.
ஜெயக்குமார் எம்.பி. நிருபர்களிடம் கூறும்போது, "நாட்டில் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்தவில்லை. மத்திய அரசு தனியாருக்காக செயல்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு தயாராகி உள்ளது. இவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டால் வேலை வாய்ப்பு குறைந்துவிடும். விலைவாசி கடுமையாக உயர்ந்து விடும். எனவே பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க கூடாது" என்றார்.