பந்தலூர்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் நிலம் ஈரப்பதமாக இருப்பதால், சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து விழும் சம்பவம் நிகழ்கிறது.
இந்த நிலையில் பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே குதிரைவட்டம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று வீசிய சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குதிரைவட்டம்-செறியெரி சாலையோரத்தில் இருந்த 3 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது.
அப்போது அந்த வழியாக யாரும் வராததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் அதில் ஒரு மரம் குடியிருப்பு பகுதியில் சாய்ந்ததால் வீடுகள், கார் சேதம் அடைந்தது. அங்கு மேலும் சில மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளதால், அவற்றை உடனடியாக வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.