காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது
காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது.
ஈரோடு
காரைக்காலில் இருந்து ஈரோட்டுக்கு 944 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தது.
944 டன் யூரியா
ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை உர விற்பனை நிலையங்கள் உள்பட 556 விற்பனை நிலையங்கள் மூலமாக உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கீழ்பவானி வாய்க்காலில் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே உர தேவை அதிகமாக உள்ளது. இதன்காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து உரம் கொள்முதல் செய்யப்பட்டு, ஈரோட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 944 டன் யூரியா உரம் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1,262 டன் யூரியா, 2 ஆயிரத்து 57 டன் டி.ஏ.பி., 2 ஆயிரத்து 366 டன் பொட்டாஷ், 7 ஆயிரத்து 300 டன் காம்ப்ளக்ஸ் உரம் ஆகியன இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. 45 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை யூரியா 266 ரூபாய் 50 காசுக்கும், சில்லரை உர விற்பனையாளர்கள் அதிகபட்ச விலைக்குள் விற்க வேண்டும்.
கடும் நடவடிக்கை
யூரியா உரத்துடன் வேறு ஏதேனும் சில பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான புகார்களுக்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், ஈரோடு மாவட்ட தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குனர் 0424 2339101 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண் பரிசோதனை செய்து பெறப்பட்ட மண் வள அட்டைகளின் அடிப்படையில் அல்லது வேளாண் துறை பரிந்துரைப்படி உரமிட வேண்டும். தேவைக்கு அதிகமாக யூரியா உரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பயன்படுத்தினால், பயிர்களில் பூச்சி நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உர விற்பனையாளர்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விவசாயிகளுக்கு உரம் வழங்க வேண்டும்.
இவ்வாறு இணை இயக்குனர் சின்னசாமி கூறினார்.