கர்நாடகத்துக்கு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க சிபாரிசு செய்ய வேண்டும் - மத்திய குழுவினரிடம், பசவராஜ் பொம்மை வலியுறுத்தல்

மழை, வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், கர்நாடகத்திற்கு கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என்று மத்திய குழுவினரிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-09-04 21:22 GMT
பெங்களூரு:

மத்திய குழுவினர் சந்திப்பு

  கர்நாடகத்தில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் வடகர்நாடக மாவட்டங்கள் மற்றும் குடகு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் வீடுகள் இடிந்திருப்பதுடன், பயிர்களும் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை பார்வையிடுவதற்காக மத்திய உள்துறை அதிகாரியான சுசீல் பால் தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று பெங்களூருவுக்கு வருகை தந்தனர்.

  வருகிற 7-ந் தேதி வரை, அந்த குழுவினர் கர்நாடகத்தில் மழை பாதித்த மாவட்டங்களை பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர். இந்த நிலையில், பெங்களூருவுக்கு வந்துள்ள அந்த குழுவினர், நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார்கள். அவர்களில் மாநிலத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை மத்திய குழுவினரிடம், பசவராஜ் பொம்மை வழங்கினார்.

4 ஆண்டுகளாக மழை

  பின்னர் அந்த குழுவினரிடம், கா்நாடகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து மழை, வெள்ளத்தால் பெருமளவு சேதம் ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் பெய்த மழையால் பெலகாவி மாவட்டத்தில் பெருமளவு சேதம் ஏற்பட்டு இருந்தது. அந்த மாவட்டத்தில் மழை நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கி இருந்தேன் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

  குடகு மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக மலைச்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஏராளமான வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன் மத்திய குழுவினரிடம், மழை, வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்காக கர்நாடக அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவிடம் வழங்கும்படி கோரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

கூடுதல் நிவாரணம் வழங்க...

  குறிப்பாக மழை, வெள்ளத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மழையால் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதால் கூடுதல் நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யும்படியும், மத்திய குழுவினரிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார்.

  அத்துடன் கர்நாடகத்திற்கு கூடுதல் நிவாரணம் கிடைப்பதற்காக, தேசிய பேரிடர் இழப்பின் கீழ் நிவாரணம் வழங்கும் விதிமுறைகளில் மாற்றம் செய்யும்படியும் மத்திய குழுவினரிடம் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின் போது வருவாய்த்துறை மந்திரி அசோக் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

மேலும் செய்திகள்