வெறிநாய்கள் கடித்து குதறிய சிறுவன் குடும்பத்துக்கு நிவாரணம்- கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மனு
வெறிநாய்கள் கடித்து குதறிய சிறுவன் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினார் கோரிக்கை மனு கொடுத்தனர்.
தென்காசி:
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தென்காசி மாவட்ட தலைவர் யாசர்கான் தலைமையில் அக்கட்சியினர் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை சாலை பகுதியை சேர்ந்தவர் செய்யது அலி மகன் ஆதில் (வயது 7). இவன் கடந்த 2-ந் தேதி மாலை தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் ஒன்று சேர்ந்து சிறுவனை கடுமையாக கடித்து குதறியதோடு அருகிலுள்ள மயானக்கரைக்கு இழுத்து சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வெறிநாய்களை விரட்டி சிறுவனை மீட்டனர். வெறிநாய்கள் கடித்ததில் சிறுவனுக்கு தலை, கை, கால், கழுத்து ஆகிய இடங்களில் படுகாயமும், கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றான். எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவிருக்கின்றது. பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் ஏழ்மை நிலையிலும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் இருப்பதால், சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் சிறுவன் ஆதில் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வக்கீல் சர்தார் அரபாத், பொதுச்செயலாளர் ஷேக்ஜிந்தாமதார், பொருளாளர் செய்யது மஹ்மூத், தொகுதி தலைவர் சினா சேனா சர்தார், நகர தலைவர் பாதுஷா, நகர செயலாளர் முஹம்மது ஆசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.