சேலம், செப்.5-
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 2-வது நாளாக கனமழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னங்குறிச்சி செங்கலணை, புது ஏரி நிரம்பியது.
2-வது நாளாக மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாக்கடை கழிவுநீருடன் மழைநீர் கலந்து சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம், நாராயண நகர், பச்சப்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில மழைநீர் தேங்கியது. மேலும் பச்சப்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது.
ஏற்காடு
குறிப்பாக ஏற்காட்டில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக மலைப்பாதையில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மலைப்பாதையில் செம்மண் கலந்த நீர் பாய்ந்தோடியது. ஒரு சில இடங்களில் மலைப்பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் அருவிகளில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அருவிகளில் நின்று செல்பி எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று முன்தினம் மட்டும் ஏற்காட்டில் 12¾ சென்டி மீட்டர் (127.6 மில்லிமீட்டர்) மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்காடு மலைச்சாலையில் சிறு கற்கள் விழுந்ததால் நேற்று காலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் மலைப்பாதையில் வண்டியை ஓட்ட முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறையினர் துரிதமாக செயல்பட்டு சாலையில் உள்ள கற்களை அப்புறப்படுத்தினர்.
செங்கலணை, புது ஏரி நிரம்பியது
ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக அடிவாரம் பகுதியில் உள்ள புதுஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து புது ஏரி மற்றும் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரி நேற்று பகலில் நிரம்பும் தருவாயில் இருந்தன.
அதேநேரத்தில் அங்குள்ள செங்கலணை பகுதிக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பின்னர் செங்கலணை நிரம்பி ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடிவாரம் பகுதியில் உள்ள கற்பகம் கிராமத்தில் உள்ள தடுப்பணையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த நிலையில், தாய் ஏரி எனப்படும் புது ஏரி நேற்று இரவு 10 மணிக்கு தனது முழு கொள்ளளவை எட்டி வழிந்தோட தொடங்கியது. இதனை அந்த பகுதி விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர். உபரிநீர் கொத்துக்காரன் ஓடை வழியாக மூக்கனேரிக்கு சென்று கொண்டு இருக்கிறது.
மழையளவு
சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழையளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
ஏற்காடு-127.6, சங்ககிரி-17, மேட்டூர்-15.8, சேலம்-13.8, ஆத்தூர்-11.4, காடையாம்பட்டி-6, கெங்கவல்லி, கரியகோவில், தம்மம்பட்டி-5, ஆனைமடுவு, ஓமலூர், வாழப்பாடி-4, பெத்தநாயக்கன்பாளையம்-2.
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக ஆங்காங்கே சில அருவிகள் தோன்றி தண்ணீர் விழுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் நேற்று காலை புதுஏரிக்கு வரும் ஓடையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள மலை மற்றும் விவசாய நிலங்களில் இருந்த மரங்கள் சேதமானது. மேலும் தோட்டத்தில் கட்டியிருந்த ஆடு மற்றும் கன்றுகுட்டிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் சந்திரகவுண்டர் என்பவருக்கு சொந்தமான பாக்கு மரத்தோப்பில் கல் மற்றும் மண் நிரம்பியதில் நூற்றுக்கும் மேற்பட்ட பாக்குமரங்கள் நிலத்தில் புதைந்து சேதமாகின.
அதேபோல், ராஜா என்பவரது வீட்டின் அருகில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தொடர்ந்து பெய்த மழையால் புதுஏரிக்கு தற்போது தண்ணீர் அதிகளவில் வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்ட இருக்கிறது. விரைவில் ஏரி நிரம்ப வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் அங்கு சென்று கண்காணித்து வருகின்றனர். தொடர் மழையால் கன்னங்குறிச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் ஏரிக்கு வந்து தண்ணீர் நிரம்பி உள்ள காட்சியை கண்டுகளித்தும், குளித்தும் செல்கின்றனர். நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் புதுஏரியில் குளிப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தடை விதிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.