சுருக்குமடி- இரட்டைமடி வலைகளை அனுமதிக்க மாட்டோம்
சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை அனுமதிக்க மாட்டோம் என்று தரங்கம்பாடியில் நடந்த 63 மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொறையாறு:
சுருக்குமடி மற்றும் இரட்டைமடி வலைகளை அனுமதிக்க மாட்டோம் என்று தரங்கம்பாடியில் நடந்த 63 மீனவ கிராம நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் சுருக்குமடி வலைக்கு எதிரான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 6 மாவட்டங்களை சேர்ந்த 63 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவ கிராமம் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். நாகை அக்கரைபேட்டை கிராம நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
அனுமதிக்கமாட்டோம்
கூட்டத்தில் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்ய வலியுறுத்தி மீனவ கிராம நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கூட்டத்தின் முடிவில் சுருக்குமடி வலை, இரட்டைமடி வலை, அதிவேக என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை சென்னை சென்று தமிழக முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து சுருக்குமடி வலைக்கு எதிராக ஒவ்வொரு கிராமங்களின் லெட்டர் பேடுகளில் மனு அளிக்க உள்ளோம்.
இதைத்தொடர்ந்து நாகையில் மாநில அளவிலான சுருக்குமடி வலைக்கு எதிரான கிராம நிர்வாகிகளின் கூட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பாதுகாப்பு பணியில் போலீசார்
கூட்டத்தில் 6 மாவட்டத்தில் உள்ள 63 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள், மீனவ பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை முன்னிட்டு பூம்புகார், வானகிரி, கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தரங்கம்பாடி உள்ளிட்ட கடற்கரை மீனவ கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.