கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறல்: தனியார் வங்கிகள், கடைகளுக்கு அபராதம் விதிப்பு வருவாய்த்துறையினர் நடவடிக்கை

கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத தனியார் வங்கிகள், கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2021-09-04 17:37 GMT
விழுப்புரம், 

தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும்  கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து அரசு தீவிரம் கவனம் செலுத்தி வருகிறது. 

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

அபராதம்

இந்நிலையில் விழுப்புரம் நகரில் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று நேற்று காலை தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், கிராம உதவியாளர்கள் குமரவேல், ஷாஜகான், உதவியாளர் பாரதிராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள கடைகள், தனியார் நிறுவனங்கள், வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 2 தனியார் வங்கிகளிலும், 2 தனியார் நிதி நிறுவனங்களிலும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருந்ததோடு  தனிமனித இடைவெளியையும் பின்பற்றவில்லை. இதையடுத்து அந்த வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு அதிகாரிகள் தலா ரூ.700-ஐ அபராதமாக விதித்தனர்.

 மேலும் ஓட்டல்கள், நகை கடைகள், அடகு கடைகள், பாத்திரக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட 15 கடைகளில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததால் அந்த கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.3,300-ஐ அபராதமாக விதித்தனர்.

மேலும் செய்திகள்