திண்டிவனத்தில் ஓட்டல் ஊழியர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை, பணம் கொள்ளை மர்ம மனிதர்கள் கைவரிசை
திண்டிவனத்தில் ஓட்டல் ஊழியர் வீட்டில் ரூ.2½ லட்சத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.;
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்லூரி சாலை பாரதிதாசன் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் நாகமணி. இவரது மகன் கலைராஜ்(வயது 26). ஓட்டல் ஊழியர்.
இவரது சொந்த ஊர் மேல்பாக்கம் கிராமம். நேற்று முன்தினம் கலைராஜ், தனது மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினருடன் தனது சொந்த கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில் பங்கேற்க சென்றார்.
நகை கொள்ளை
பின்னர் அங்கிருந்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கிருந்த பீரோ திறந்த நிலையில் அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, 21 ஆயிரத்து 330 ரூபாய் ஆகியன கொள்ளை போயிருந்தது.
இதன் மூலம், நள்ளிரவில் வீட்டுகதவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம மனிதர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதுபற்றி கலைராஜ் ரோசணை போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், இன்ஸ்பெக்டர் பிருந்தா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர்.
வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.