இலவச நேரடி பயிற்சி வகுப்பு

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.

Update: 2021-09-04 17:14 GMT
சிவகங்கை, 
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது.
போட்டி தேர்வு
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அரசு வேலைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேரடி பயி்ற்சி வகுப்புகள் நாளை (திங்கட்கிழமை) முதல் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்குகிறது இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப் படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மே முதல் இந்த பயிற்சி வகுப்புகள் இணைய தளம் மூலம் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் கல்லூரிகளும் மற்றும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளும் நேரடியாக இயங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களிலும், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நேரடியாக அலுவலகத்தில் நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
முககவசம் கட்டாயம்
எனவே சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நாளை(திங்கட் கிழமை) முதல் கட்டாயம் முகக்கவசத்துடனும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வகுப்புகள் நேரடியாக நடைபெற உள்ளது. தற்போது குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வுகளுக்கு நேரடியாக வகுப்புகள் நடைபெற உள்ளது. எனவே, இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
 இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்