தேனியில் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசார் ஒத்திகை

தேனி ஆயுதப்படை மைதானத்தில் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-04 16:49 GMT
தேனி:
தேனி ஆயுதப்படை மைதானத்தில் கலவரத்தை கட்டுப்படுத்துவது குறித்து போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டனர். 
போலீசார் ஒத்திகை
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, கலவரங்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு கலவரம் உருவானால், அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுக்கவாத்து ஒத்திகை, தேனி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த ஒத்திகை பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது கலவரத்தை கட்டுப்படுத்தும் யுக்திகள், கலவர கூட்டத்தை அப்புறப்படுத்துவது தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.
பின்னர் போலீசார் இரு பிரிவாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் போலீஸ் சீருடையில் லத்தி, துப்பாக்கி போன்றவற்றுடன் அணிவகுத்து நின்றனர். மற்றொரு பிரிவினர் சாதாரண உடையில் கலவர கும்பல் போல் செயல்பட்டனர்.
பாராட்டு
அப்போது கலவர கூட்டத்தினர் போலீசாரை தாக்க முயற்சிப்பது போன்றும், அவர்களை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிப்பது, பின்னர், தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் கலைப்பது போன்றும் தத்ரூபமாக ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஒத்திகை முடிந்தவுடன் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட குற்றப்பதிவேட்டுக்கூட போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, ஆயுதப்படை பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் ஆயுதப்படை பிரிவு போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்