ஆண்டிப்பட்டி தேனி இடையே ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம்
ஆண்டிப்பட்டி-தேனி இடையே அகல ரெயில்பாதையில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. அதில் 17 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடங்களில் கடந்தது.
தேனி:
ஆண்டிப்பட்டி-தேனி இடையே அகல ரெயில்பாதையில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. அதில் 17 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடங்களில் கடந்தது.
மதுரை-போடி ரெயில் பாதை
மதுரை-போடி இடையே ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. மீட்டர்கேஜ் ரெயில் பாதையாக இருந்த இந்த ரெயில்பாதையை அகல ரெயில்பாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக இந்த ரெயில் பாதையில் இயக்கப்பட்ட ரெயில் கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரெயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்ட போதிலும் பணிகள் சில ஆண்டுகள் முடங்கிக்கிடந்தன. மக்களின் பல்வேறுகட்ட போராட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு இந்த ரெயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவுபடுத்தியது.
இதையடுத்து ரெயில்பாதை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்தது. இதில், முதற்கட்டமாக உசிலம்பட்டி வரையும், 2-வது கட்டமாக ஆண்டிப்பட்டி வரையும் பணிகள் முடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ரெயில் சோதனை ஓட்டங்களும் நடத்தப்பட்டன. மேலும் தேனி வரை பணிகள் முடிந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ரெயில் என்ஜின் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம்
பின்னர் கடந்த மாதம் 4-ந்தேதி 90 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த ரெயில்பாதையில் ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரை 120 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மதுரையில் இருந்து ரெயில் என்ஜின் ஆண்டிப்பட்டி ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தது. அங்கிருந்து பகல் 11.30 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. தண்டவாளத்தில் புழுதி பறக்கவிட்டபடி அசுர வேகத்தில் ரெயில் என்ஜின் தேனியை நோக்கி வந்தது. ஆண்டிப்பட்டி-தேனி இடையிலான 17 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடங்களில் கடந்து பகல் 11.39 மணிக்கு தேனி ரெயில் நிலையத்துக்கு என்ஜின் வந்தது. ரெயில் நிலையத்தில் என்ஜினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறிது நேரத்தில் தேனியில் இருந்து புறப்பட்டு மீண்டும் ஆண்டிப்பட்டி நோக்கி ரெயில் என்ஜின் சென்றது.
அதிகாரிகள் குழு
இந்த ரெயில் என்ஜினில் தென்னக ரெயில்வே துணை முதன்மை பொறியாளர் (கட்டுமானம்) சூரியமூர்த்தி தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த், உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பயணம் செய்தனர். ரெயில் என்ஜினை ரெயில்வே துறையில் பல ஆண்டுகள் அனுபவம் மிக்க அழகுராஜா என்பவர் இயக்கி வந்தார்.
இந்த சோதனை ஓட்டம் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. தென்னக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இந்த மாதம் இறுதிக்குள் இந்த ரெயில்பாதையில் ஆய்வு நடத்த உள்ளார். தற்போது தேனியில் இருந்து போடி வரையிலான ரெயில்பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அந்த பணிகளும் முடிக்கப்பட்டு ரெயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
இந்த ரெயில் என்ஜின் சோதனை ஓட்டத்தை பொதுமக்கள் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர். சோதனை ஓட்டத்தின் போது தேனி நகரில் மதுரை சாலை, பாரஸ்ட்ரோடு, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் உள்ள ரெயில்வே கேட் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் சாலையின் இருபுறமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.