திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூரில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உடன் வேலை செய்யும் 29 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஆசிரியை
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
பின்னர் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறந்து செயல்பட்டு வருகிறது.. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே திறந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட அன்றே ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சில இடங்களில் பள்ளிகளும் மூடப்பட்டன. இதற்கிடையில் கடந்த 1-ந் தேதி திருப்பூர் நெசவாளர் காலனி அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டது. அப்போது மதுரையை சேர்ந்த அந்த பள்ளியின் 34 வயதான தமிழ் ஆசிரியை பணிக்கு வந்தார்.
கொரோனா தொற்று உறுதி
தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை சக ஆசிரியர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் தமிழ் ஆசிரியை தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வந்தது.
அப்போது தமிழ் ஆசிரியைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் நேற்று காலை பள்ளியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், மருந்து அடிக்கும் பணியும் பணியும் நடந்தது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வகுப்பிற்கு செல்லாததால் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சக ஆசிரியர்கள் 29 பேருக்கு சுகாதாரத்துறை சார்பில் நேற்று பள்ளியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.