மளிகை கடைக்காரர் மனைவியிடம் 6 பவுன் நகை பறிப்பு

குலசேகரன்பட்டினத்தில் மளிகை கடைக்காரர் மனைவியிடம் 6 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2021-09-04 14:17 GMT
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் மளிகை கடைக்காரர் மனைவியிடம் 6 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- 

மளிகை கடைக்காரர்

குலசேகரன்பட்டினம் அனுகூலபுரத்தை சேர்ந்தவர் சூசைராஜ். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ஆரோக்கியமேரி பாத்திமா (வயது 50). 

நேற்று முன்தினம் மாலை ஆரோக்கியமேரி பாத்திமா கடைக்கு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர்.

நகை பறிப்பு

அவர்கள் ஆரோக்கியமேரி பாத்திமா அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி, ஆரோக்கியமேரி பாத்திமாவிடம், சிகரெட் வேண்டும் என்று கேட்டார். 

உடனே அவர் சிகரெட் எடுப்பதற்காக கடைக்குள் செல்ல புறப்பட்டார். அப்போது திடீரென அந்த நபர், ஆரோக்கியமேரி பாத்திமா கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க தாலிச்சங்கிலியை பறித்தார். பின்னர் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்றவருடன் அந்த நபரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

அதிர்ச்சி

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆரோக்கியமேரி பாத்திமா ‘திருடன்... திருடன்...’ என்று கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மர்மநபர்களை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் சிக்காமல் தப்பி சென்று விட்டனர்.  
இதுகுறித்து ஆரோக்கியமேரி பாத்திமா குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்