விசைப்படகின் இரும்பு தூண் உடைந்து விழுந்து மீனவர் பலி
தேங்காப்பட்டணம் அருகே கடலில் மீன்பிடித்தபோது இரும்பு தூண் உடைந்து விழுந்ததில் மேற்கு வங்க மீனவர் பலியானார். குமரியை சேர்ந்தவர் படுகாயம் அடைந்தார்.
குளச்சல்:
தேங்காப்பட்டணம் அருகே கடலில் மீன்பிடித்தபோது இரும்பு தூண் உடைந்து விழுந்ததில் மேற்கு வங்க மீனவர் பலியானார். குமரியை சேர்ந்தவர் படுகாயம் அடைந்தார்.
ஆழ்கடல் மீன்பிடிப்பு
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஆன்டணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 13 மீனவர்கள் கடந்த 31-ந்தேதி இரவு கொல்லம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் நேற்று முன்தினம் காலை தேங்காப்பட்டணத்தில் இருந்து 23 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
தூண் விழுந்தது
அப்போது, விசைப்படகின் பின் பகுதியில் இருந்த ஒரு இரும்பு தூண் திடீரென உடைந்து மேற்கு வங்காளத்தை சேர்ந்த ரட்டன் தாஸ்(வயது 16), குமரி மாவட்டம் முட்டத்தை சேர்ந்த ெபர்க்மான்ஸ் (50) ஆகியோர் மீது விழுந்தது. இதில் ரட்டன் தாசுக்கு தலையில் பலத்த காயமும், பெர்க்கமான்சுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மீனவர்கள் உடனே விசைப்படகை கரைக்கு திருப்பினர்.
மேற்கு வங்க மீனவர் பலி
பின்னர், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரட்டர் தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ெபர்க்கமான்சுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ரட்டன் தாசின் தந்தை கனு தாஸ் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கிங்சிலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.